நுண் அண்டம் (சிறு கதை)



நடந்ததை புரிந்து கொள்ள கொஞ்சம் நேரம் பிடித்தது!


நாங்கள் இரு நூற்று எட்டு பேர் இருந்தோம். புது விதமான பயண முறைகள் பல உலகங்களில் தோன்றி நெடு நாட்கள் ஓடி விட்டன. ஆனாலும், ஒவ்வொரு பயணத்திலும் நாம் சந்திக்கின்ற பிரச்சனைகள் இந்த அண்டத்தை புரிந்து கொள்ளுவதில் நமக்கு பெரிய உதவியாக இருக்கிறது.


ஏறக்குறைய ஆயிரம் வருடங்களுக்கு முன்னால், அடுத்துள்ள கிரகத்தின் புவி ஈர்ப்பு சக்தியை பயன் படுத்தி, மனித இனம் ஒரு கிரகத்தில் இருந்து இன்னொரு கிரகத்திற்கு பயணித்தார்கள்


இன்று பல ஆயிரம் ஒளி வருடங்களை கூட வால் நட்சத்திரங்கள் போன்ற விண் கோள்களை ஒட்டிக் கொண்டு பல உயிரனங்கள் சென்று வருகின்றன. ஏன், நம் பூமிக்குக் கூட முதல் உயிரனம் அப்படித்தான் வந்து இருக்கும் என்று பலரும் நம்புகிறார்கள்.


நாங்கள் எங்கள் இருப்பிடத்தை விட்டு கிளம்பியவர்கள் அல்ல. என்னுடைய மூன்றாவது முறை தாத்தா, அதாவது என் தாத்தாவின் அப்பா, எனது மூன்றாவது முன்னோடி தாத்தா, அந்த தாத்தா தான், இருப்பிடத்தை விட்டு கிளம்பியவர். இருப்பிடத்தில் அளவிற்கு அதிகமாக மக்கள் தொகை கூடிவிட்டால், சிலரை இருப்பிடத்தை விட்டு கிளப்பி விடுவார்கள். அப்படி கிளம்பியவர் தான் அந்த தாத்தா. கால் ஊன்றி வளர்வதற்கு புது இடம் தேடி புறப்பட்டவர்கள்!


அவர்கள் சிறிது காலம் பயணித்து, பிறகு வந்து செல்லும் ஒரு கல்லை பற்றி கொண்டார்கள். அதன் மூலம் பல நாட்கள், வருடங்கள் பயணித்தார்கள்.


சிலர் இறந்து போனார்கள்; சிலர் பிறந்து வந்தார்கள். தலைமுறைகள் மாறிப் போயின! இப்பொழுது நான்காவது தலைமுறையாளனாகிய நான் தான் இந்த கூட்டத்துக்கு தலைவனாக இருக்கிறேன்.


பிறந்து வளர்ந்ததே இந்த கல்லின் மேல்தான். சூரியன் என்பது புத்தகத்தில் சொல்லப்படும் ஒரு பொருள். சந்திரன் எங்கள் கற்பனையில் உண்டு! செடி கொடி, மரம் மட்டை எல்லாமே நாங்கள் பார்த்திராத ஒன்று.


எங்கள் எண்ணங்கள் எல்லாமே எங்கள் முன்னோர்கள் எங்களுக்காக விட்டுச்சென்ற குறிப்புகளிலும், புத்தகங்களிலும் படித்தவையை கொண்டு உருவாக்கப்பட்டவை. சொல்லப் போனால், அறிவியல் அறிவும் சிந்தனையும், எல்லாமே அவர்கள் விட்டுச் சென்ற பல ஆயிரக்கணக்கான புத்தகங்களின் தொகுப்பில் இருக்கிறது. நாளை நாங்கள் வாழப்போகும் வாழ்க்கையும் அதை நம்பியே இருக்கிறது.


இவைகளை எல்லாம், எங்கள் ஜீன்களில் உருவேற்றப்பட்டு இருக்கும் ஆயிரம் எண்ணங்கள், ஆயிரமாயிரம் வாழ்க்கை பாடங்களாக மாறிப்போயின. அவைகள்தான் எங்களை வழி நடத்துகின்றன. உள்ளுணர்வுகளாக மாறி எங்களை வாழ வைக்கும் தெய்வங்கள் ஆகின்றன. இவைகளை நாங்கள் படிக்கத் தேவையில்லை! அவைகள் எங்கள் மனதில் கலந்துவிட்டன; ஜீன்களோடு இணைந்து விட்டன.


உலகம் எப்படி இருக்கும் என்று நாங்கள் பார்த்தது இல்லை. ஆனால் தாத்தா அதை குறித்து நிறைய 'எழுதி' வைத்து இருக்கிறார். உதாரணத்திற்கு, எப்படி எங்கள் பயணம் துவங்கியது என்று விரிவாக அவர் எழுதி இருக்கிறார். உலகத்தலைவர் ஒரு நாள் இவர்களை எல்லாம் அழைத்து, நீங்கள் வேறு உலகம் பார்த்துக் கொண்டு போய்விடுங்கள் என்று கூறிவிட்டார். எந்தவித முன் அறிவிப்பும் இல்லை. ஏன் இவர்களை மட்டும் போக சொல்லுகிறார்கள்? ஏன் வேறு யாரும் போகக் கூடாது? காரணம் மட்டும் சொல்லப்பட்டது. இந்த உலகில் இருப்பதற்கு இடம் போதவில்லை.


அவர்கள் இரு நூறு பேரும், அரை மணி நேரத்தில் கிளம்ப வேண்டும் என்று பணிக்கப் பட்டார்கள்! எந்த வாதமும் இல்லை. சட்டம் என்பது தலைவரின் முடிவு. இதில் மாற்று கருத்துக்கு இடமும் இல்லை. சொன்னால் யாரும் கேட்கவும் மாட்டார்கள்.


அரை மணி நேரத்தில், அவர்கள் எல்லோரும் புனலுக்கு வந்துவிட்டார்கள், செல்லுவதற்கு தயாராக. புனல் எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாது. ஆனால், அது தண்ணீர் நிறைந்தாக சில சமயங்களிலும், அந்த உலகில உபயோகப்படுத்தி நிராகரிக்கப்பட்ட பல பொருட்களின் சேர்க்கையாக மற்ற சமயங்களிலும் இருக்குமாம்! அதில் நம்மையும் ஏற்றி விட்டுவிடுவார்களாம். நாமும் நிராகரிக்கப்பட்டவர்கள் தானே?


தீடீரென்று மிகுந்த அழுத்தம் ஏற்படுமாம். அது புவி ஈர்ப்பு சக்தியாலும் இருக்கலாம்; காந்த சக்திகளாலும் இருக்கலாம். அல்லது வெறும் காற்று அழுத்தமாகவும் இருக்கலாம். அது எப்படி இருந்தாலும், அந்த மிக உயர்ந்த அழுத்தம், நம்மை வெளியே எறிந்துவிடுமாம்

வெளியே வந்த விழுந்த கொள்ளு தாத்தா இறந்து வருடங்கள் கடந்து ஓடிவிட்டன. எங்கள் வாழ்க்கை, கல்லில் தொடங்கி கல்லில் வளர்ந்து கொண்டு இருந்த சமயத்தில் தான் இப்படிப்பட்ட ஒரு விபத்து நிகழ்ந்தது.


இந்த திடீர் விபத்து, மாபெரும் அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் இருந்த கல், சிறிது அருகே வந்துவிட்ட வேற்றொரு கல்லின் காந்த அலைகளால் தூக்கி எறியப்பட்டது. அந்த அதிர்ச்சியில், அதனுடைய பாதை விலகி, வேறொரு விண்பொருளின் மீது மோதியது.


மோதியது? மோதியதா என்ன?


மோதி இருந்தால் சுக்கு நூறாக சிதறி இருக்க வேண்டுமே? அப்படி எதுவும் நிகழவில்லை.


ஏதோ பசிக்காக சாப்பாட்டை விழுங்கும் ஒர் உயிரினம் போல, நாங்கள் பயணித்த கல், அந்த புது விண்பொருளுடன் கலந்து ஐயக்கியமானது!


நாங்கள் விழுந்த இடத்தை எங்கள் அணிகள், வாழ்வதற்கு ஏற்றதா, என்பதை அதிவிரைவாக கணக்கிட்டு கொண்டு இருந்தன.


இந்த உலகம், அதிகமாக கார்பனால் ஆனது. நம் பிழைப்புக்கு ஏற்றது தான். நாமும் கார்பனால் ஆனவர்கள் தான். இருந்தாலும் உலகமே கார்பனாக இருந்தால்? பார்ப்போம்!


நாங்கள் விழுந்த இடம் கார்பன் சேர்க்கையில் உருவான ஒரு பொருள். அது மிருதுவானதாக இருந்தது. நீர் நிறைய இருந்தது. ஆனால், அதில் அமிலமும் கலந்து இருந்தது. நீர் இருப்பது நல்லது. ஆனால், அமிலச் சேர்க்கை? அளவிற்கு அதிகமானால் நம் வாழ்விற்கு எமனாக அல்லவா முடியும்?


விழுந்த வேகத்தில், நாங்கள் பிரிந்து விழுந்தாலும், நிறைய பேர் கண்ணுக்கு தெரியும் தூரத்திலேயே இருந்தார்கள். இருந்தாலும் பதினைந்து பேரை காணவில்லை என்று பாண்டி தெரிவித்தான். பாண்டி எனக்கு மிக முக்கியமான உதவியாளன். எப்பேர்ப்பட்ட வேலையையும் சுலபத்தில் முடித்து விடுவான்.


அவன் திறமையில் எனக்கு என்றுமே அலாதியான நம்பிக்கை உண்டு!


நாங்கள் விழுந்த இடம் ஒரு சமத்தளம் போல் இருந்தது! அதில் சாம்பல் நிறத்தில் காற்றில் அசையும் ரப்பர் குச்சிகளை போல் ஏதோ நின்று கொண்டு இருந்தது.


அது ஒரு வகை செடியாக இருக்குமோ?


ஒரு வகை கந்தக வெளிச்சம் அந்த இடம் முழுவதும் பரவிக் கிடந்தது. அது எந்த நட்சத்திர வெளிச்சம் போலும் இல்லாமல், இருட்டில் படரும் வெளிச்சம் போல கொஞ்சம் நேரத்தில் எங்களுக்கு பரிச்சயம் ஆகிப்போனது. அந்த வெளிச்சம், அந்த உலகம் அதனுடைய சொந்த சூட்டிலேயே உருவாக்கியதாக இருந்தது.


அந்த மந்த வெளிச்சத்தில், சாம்பல் நிறச்செடிகள், ஏதோ பேய்கள் அங்கே இருந்த அமிலக்காற்றுக்கு ஆடுவது போல் தெரிந்தன.



அவைகளுக்கு நடுவே நாங்கள் இறங்கி இருந்தோம்!


ஒரு வகையில் அந்த செடிகள் எங்கள் உயிர்களை காத்தவைகளாக எனக்குப் பட்டது! நாங்கள் விழுந்த வேகத்தை மட்டு படுத்தி, எங்களுக்கு எந்த அடியும் இல்லாமல் பாதுகாத்தது என்றுதான் சொல்ல வேண்டும்!


எல்லோரும் இங்கே வாருங்கள்!’ என்று நான் கட்டளையிட்டேன்!

எல்லோரும் நான் இருக்கும் இடத்திற்கு விரைந்து வந்தார்கள். சாம்பல் செடிகளை வளைத்தும் அவைகளின் உள்ளே புகுந்தும் வந்தார்கள்.


எல்லோரும் இருக்கிறோமா? யாரைக்காணவில்லை என்று சொல்ல முடியுமா?’


வெவ்வேறு பெயர்கள் சொல்லப்பட்டன. கடைசியில் பன்னிரண்டு பேரைக் காணவில்லை என்று கண்டு கொண்டோம். முக்கியமாக என் அருமை நண்பன் ஜான் பிரட்டோவை காணவில்லை என்பது தான் எனக்கு வருத்தம் அளித்தது.


நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே அந்த சத்தம் எனக்கு கேட்டது.


ஏதோ சத்தம்! யாரோ வருகிறார்கள் என்று எண்ணுகிறேன். பதுங்கி கொள்ளுங்கள்!’ என்று ஆணையிட்டேன்!


எல்லோரும் சட்டென்று செடிகளுக்கு நடுவே புகுந்து பதுங்கி கொண்டார்கள். மறைந்து கொண்டோம் என்று தான் நானும் நினைத்தேன்!


சில ஆட்கள் வந்தார்கள், செடிகளை விளக்கிக் கொண்டு! அவர்கள் எல்லோரும் பார்ப்பதற்கு எங்களை போலத்தான் இருந்தாலும் கொஞ்சம் மாறுபட்டு இருந்தார்கள்.


அவர்களிடம் ஒரு பெரிய கொம்பு தலையின் மேல் பயங்கரமாக இருந்தது! அவர்கள் நிறம், பழுப்பாக, அந்த செடிகளின் நிறத்திலேயே இருந்தார்கள்.


நான் மேலும் பயந்து, பதுங்கினேன். எல்லோரும் அப்படித்தான் செய்தார்கள். அவர்கள் கையில் வேறு ஆயுதங்கள் வைத்துக் கொண்டிருக்கலாம். யாருக்கு தெரியும்?


அவர்கள், நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். பிறகு ஏதோ சத்தம் இட்டு அவர்கள் பாஷையில் பேசினார்கள். இரண்டு மூன்று பேர்தான் இருப்பார்கள். சத்தமாக அவர்களுக்குள் ஏதோ சண்டை போல் பேசிக்கொண்டார்கள்.


அவர்கள் பேசி முடித்த அடுத்த நொடி, எங்கிருந்து முளைத்தார்கள் என்று தெரியவில்லை, தீடீரென்று இருபது முப்பது பேர் அங்கே தோன்றினார்கள்!


அவர்களில் ஒருவன், அவர்கள் தலைவனாக இருக்கலாம், எங்கள் பாஷையில் பேசினான்!


எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள்? உடனடியாக வெளியே வாருங்கள்! உங்களுக்கு எந்த தீங்கும் நிகழாது. உங்களை அகில அண்டங்களின் சட்டப்படி நாங்கள் நடத்துவோம். உங்களை எங்கள் ஆட்சியாளரிடம் அழைத்து செல்வோம்.’


நான் அமைதி காத்தேன். எல்லோரும் பதுங்கியே இருந்தோம். பயம் எங்களைவிட்டு இன்னும் போகவில்லை! என்னுடைய மூளை அதி விரைவாக வேலை செய்தது. என்ன நடக்கும்? ஒரு வேளை எங்களை கொன்றுவிட்டால்? இல்லை, ஒரு வேளை இவர்கள், எங்களை உணவாக உண்ணக்கூடியவர்களாக இருந்துவிட்டால், நம் கதி?


நான்கு தலைமுறைகளாக உயிரை பிடித்துக் கொண்டு வாழ்ந்த எங்கள் கூட்டம், என்னோடு அழிந்து போகுமோ?



நான் யோசித்தேன்! இதில் என்னால் இயலக்கூடியது என்ன?


நான் விரும்பியோ அல்லது எனது தவறுகளாலோ இந்த விபத்து நடக்கவில்லை. நான் தேர்ந்து எடுத்து, இந்த புது உலகுக்கு நாங்கள் வந்து விடவில்லை!


நடந்தவை யாவுமே நாங்கள் யாருமே முடிவு செய்த ஒன்றல்ல! இங்கே இப்பொழுது நாங்கள் எடுக்கப்போகும் முடிவே முதல் முறையாக நாங்கள் எடுக்கும் முடிவாக இருக்கும்


சரி, அப்படியே பார்த்தாலும், இதுவும் எங்கள் முடிவாக எனக்கு படவில்லை!

நாங்கள் சரி என்று அவர்களிடம் சரண் அடையாவிட்டால், அவர்கள் வன்முறையை உபயோகிப்பார்கள், கட்டாயமாக அவர்கள் சொல்லுவதை செய்யச் சொல்லுவார்கள்! எப்படி பார்த்தாலும், அவர்கள் சொல்லுவதை செய்வதுதான், சரியான முடிவாய் எனக்குப் பட்டது.


அதனால், நான் எழுந்து என் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தேன். என்னை பார்த்து எல்லோரும் வெளியே வந்தார்கள்.


நாங்கள் அத்தனை பேரும் அவர்களிடத்தில் சரண் அடைந்தோம்!


நீங்கள் எத்தனை பேர் வந்தீர்கள்?’

இரு நூற்று எட்டு’ - என்றேன்.


தலைவனைப் போல் இருந்தவன் வேறு ஒருவருடன் பேசினான்.’கணக்கு சரியாக இருக்கிறதா?’


கணக்கு சரியாக இருக்கிறது, தலைவா’.


அதெப்படி சரியாக இருக்கும் என்று நான் வியந்தேன். பதில் உடனடியாக கிடைத்தது.


ஜான் மற்றும் தொலைந்துப் போன பன்னிரண்டு பேரும், அவர்களுடன் இருந்தார்கள்!


ஒருவகையில் காணாமல் போனவர்கள், கிடைத்துவிட்டார்கள் என்பதற்காக சந்தோசப்பட்டேன். ஆனால், இவர்களிடம் அவர்களும் சிக்கிக் கொண்டார்களே என்று வருந்தவும் செய்தேன்.


அங்கே நாங்கள் நீண்ட நேரம் இருக்கவில்லை.


தலைவன் சொன்னான் - ‘நடங்கள் சீக்கிரம். நாம் ஆட்சியாளரை உடனடியாக காணவேண்டும்’.


நாங்கள் வேகமாக நடந்தோம். அந்த உலகம் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. சிறிது நேரத்திலேயே, நாங்கள் செல்ல வேண்டிய இடம் வந்து விட்டது.


செடிகளின் நடுவே ஒரு திறந்தவெளி! அதை பெரிய திறந்தவெளி என்று சொல்லவும் முடியாது. அங்கே அந்த சாம்பல் செடிகளையே வளைத்து, ஒட்டி ஒரு சிறு வீடு போல் கட்டி இருந்தார்கள். , இது தான் ஆட்சியாளரின் வீடா?


அவர்கள் எங்களை அங்கே அழைத்து சென்றார்கள். ஒரு ஆட்சியாளர் வீற்று இருந்தார்.


அங்கே நிறைய மக்கள் நின்று கொண்டும், உட்கார்ந்து கொண்டும் இருந்தார்கள். நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றோம்.


எங்களுக்கு எல்லாமே புதுமையாக இருந்தது! இதுவரை நாங்கள் யாருமே ஒர் உலகத்தை பார்த்ததே இல்லையே!


நாங்கள் எல்லோரும், ஆச்சர்யமாகவும் மிகுந்த உற்சாகமாகவும், அவர்களின் உலகத்தை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே நடந்தோம்!



ஆட்சியாளர் ஒரு மேடையின் மீது வீற்றிருந்தார். அவர் அருகில் நாங்கள் வந்தவுடன், அந்த தலைவர் பேசத் தொடங்கினான்.


ஆட்சியாளரே! உங்களுக்கு எங்கள் வந்தனங்கள்!’ என்றார் அந்த தலைவர்.

வந்தனம், காவல் தலைவரே! என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறீர்கள்!’


ஐயா, ஆட்சியாளரே! இவர்கள்தான் நம் உலகத்திற்குள் தீடீரென்று நுழைந்தவர்கள். அவர்களை உங்கள் முன்னால் நிறுத்த அனுமதி அளிக்க வேண்டுகிறேன்’.


கொண்டு வாருங்கள், அவர்களை


எங்களை அவர் முன்னால் கொண்டு சென்று நிறுத்தினார்கள். அவர் எங்களை பார்த்து கேட்டார்.

யார் நீங்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்? உங்களை பார்த்தால், இதற்கு முன்னால் இந்த உலகத்தில் இருந்தவர்களைப் போல் தெரியவில்லையே’.


நான் பதில் கூறினேன்.


ஐயா, எங்கள் முப்பாட்டனாரை, அவர் வாழ்ந்து வந்த உலகத்தில் இடமில்லை என்று வெளியேற்றி விட்டார்கள். அன்றில் இருந்து, நாங்கள் நான்கு தலைமுறைகளாக வாழ உலகம் இன்றி, ஒரு பாறையின் மேல் வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு இதுப் போன்ற ஒரு உலகம் இருப்பது தெரியாது. எதேச்சையாக, நாங்கள் பயணித்த கல் வேற்றொரு கல்லின் மீது மோதியதில், நாங்கள் உங்கள் உலகத்துக்குள் தள்ளப்பட்டோம். நாங்கள் அறியாமல் நடந்த பிழை. எங்களை மன்னிக்க வேண்டும்’.


. அப்படியா? என்ன காவல் தலைவரே! இவர் சொல்லுவது சரியா? ஏதேனும் தவறு உள்ளதா?’


காவல் துறை தலைவர், எங்களை அழைத்து வந்தவர், பதில் கூறினார். ‘அவர் கூறுவது சரி தான், ஆட்சியாளரே! நமது தோழமை உலகங்களான மூக்கண்டையிலும் வெண்பலண்டையிலும் உள்ளவர்கள் இதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக செய்தி கொடுத்திருந்தார்கள். காற்றில் ஏற்பட்ட மாற்றங்களை வைத்தும், நீரில் ஏற்பட்ட மாறுதல்களை வைத்தும் அவர்கள் இதுப்போன்ற நிகழ்வுகள் நடக்க சாத்தியக்கூறுகள் உண்டு என்று சொல்லி இருந்தார்கள். மேலும், அவர்கள் புதுவிதமான உயிரனங்கள் நம் அண்டத்திற்குள் நுழையவும் சாத்தியும் உண்டு. எதற்கும் படைகளை தயார் நிலையில் வைத்திருங்கள், என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்கள்’, என்று நீண்ட பதிலை கூறினார்.


ம்ம்ம்’, என்று தலை அசைத்த ஆட்சியாளர், என்னை பார்த்து, ‘நீங்கள் என்னவெல்லாம் உண்பீர்கள்? ஒரு நாளைக்கு எத்தனை கிலோ உணவு உண்பீர்கள்?’


ஐயா, நாங்கள் கார்பன் அதிகமாக இருக்கும் உணவை தான் உண்போம். எங்களுக்கு ஒரு நாளைக்குஇதோ இப்பொழுது சொல்லி விடுகிறேன்’, என்று கூறிவிட்டு, எனது மக்களுடன் சேர்ந்து பேசி எவ்வளவு உணவு வேண்டும் என்பதை அவர்களிடம் கூறினேன்.


சரிஎன்று கூறிய ஆட்சியாளர், காவல் தலைவரிடம் எங்களுக்கு வேண்டும் உணவை கொடுத்து பசி தீர்க்க சொன்னார்.


காவல் தலைவர் எங்களை வேறு இடத்திற்கு அழைத்து சென்றார். அங்கே எங்களுக்கு தேவையான அளவிற்கு உணவு வழங்கப்பட்டது. நீண்ட நாட்களாக அரையும் குறையுமாக உண்டு வாழ்ந்த நாங்கள், முதன்முறையாக ஒரு உலகில் கிடைக்க கூடிய நானாவிதமான உணவுகளையும் உண்டு மகிழ்ந்தோம்.


இப்படியும் உணவு கிடைக்கும் என்பது எங்களுக்கு அன்று வரை தெரியாது என்பதே உண்மை! எத்தனை விதவிதமான உணவு வகைகள்! எத்தனை சுவைகள்! அப்பப்பா! உண்ண உண்ண ஆனந்தம் பெருகியது!



பசித்தீர உண்டோம் என்று சொல்லுவதைவிட, ஆசைத்தீர உண்டோம் என்று சொல்லுவது தான் சரியாக இருக்கும்!


உண்ட மயக்கத்தில் நாங்கள் எல்லோரும் நன்றாக உறங்கிப் போனோம், என்னையும் சேர்த்து!


*****


தீடீரென்று உறக்கம் களைந்து விழித்தேன்! ஏதோ சத்தம். பெரிய சத்தம்! என்னை விழித்தெழ வைத்திருந்தது.


நீர் விழும் ஓசை. பலத்த மழை பெய்கிறதோ? இது தான் மழை என்பதோ?


அது மட்டும் இல்லாமல், நீரின் ஈரம் என் மேல் விழுவது போல் இருந்தது. அங்கிருந்த செடிகளை கொண்டு கட்டப்பட்ட அந்த வீட்டின் உள்ளே இருந்தேன். நாங்கள் எல்லோரும் அதன் உள்ளே தான் இருந்தோம்.


தீடீரென்று நீர், நிறைய நீர், எங்கள் மேல் விழுந்தது. செடி வீடு அந்த ஆக்ரோஷ்மான நீரின் வேகத்தை தாங்க முடியாமல் பிய்ந்து போனது. நீர் எங்கள் எல்லோரையும் அதன் வேகத்தில் சுழற்றியது.


நீர், அலையாக எங்களை தூக்கிக் கொண்டு மேலே சென்றது. அதே வேகத்தோடு மீண்டு வந்து, எங்களை மறு கரைக்கு தூக்கிச் சென்றது. நாங்கள், நீரின் ஓட்டத்தில் மேலும் கீழும் அலைக்களிக்கப்பட்டோம். ஒரு நொடி, நீரின் மேலே மிதந்து தூக்கி எறியப்பட்டோம். மறு நொடி, அதே நீரில் அமிழ்ந்து, பிழைப்போமா மாட்டோமா? என்று மூச்சு திணறி, சாகப்பார்த்தோம்.


ஆனால் அந்த மந்தமான வெளிச்சம் மட்டும் அப்படியே இருந்தது. என்ன உலகம் இது? இதுப் போல் எதுவுமே தாத்தா எழுதவில்லையே, என்று நினைத்துக் கொண்டேன்.


சிறிது நேரம் அந்த அலைகளுக்கு நடுவே சிக்கி, அதனோடு உறவாடிய பிறகு, கொஞ்சம் நிதானம் வந்தது. சுற்றும் முற்றும் பார்க்க தொடங்கினேன்.


அப்பொழுதுதான் கவனித்தேன், அந்த உலகத்து மக்களும் அந்த நீர் வெள்ளத்தில் மேலும் கீழும் பந்தாட பட்டுக்கொண்டு இருந்தார்கள்! ஆனால், அவர்கள் அதற்காக கத்தவில்லை கதறவில்லை. ஏதோ நீர் விளையாட்டில் மேலும் கீழும் போய் வருவது போல், அதில் ஆனந்தமாய் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்! எங்களை பிடித்து ஆட்சியாளரிடம் இழுத்து வந்த பலரும், அதில் இருந்தார்கள்.


அதில் ஒருவர், எங்களிடம் சைகை காட்டினார். பயப்பட ஒன்றுமில்லை, கவலைப்படாமல் இருங்கள், என்றார்.


அதன் பிறகு, கொஞ்சம் தைரியமாக இருந்தாலும், மனம் ஏனோ பயத்தால் நிரம்பி வழிந்தது!


எத்தனை நேரம் இப்படி இருந்தது என்பது எனக்கு தெரியாது. நீண்ட, பயம் கொண்ட அந்த நிமிடங்களுக்கு பிறகு, நீரின் ஓட்டம் சிறிது சிறிதாக குறைந்து, கடைசியில் நின்று போனது.


அதன் பிறகும் நீண்ட நேரம், நீர் நின்று கொண்டே இருந்தது. ஆனால், நீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து வருவதை என்னால் உணர முடிந்தது. இன்னொன்றையும் நான் உணர்ந்தேன். அந்த நீர் கொஞ்சம் கொஞ்சமாக வெப்பம் அடைவதையும் என்னால் உணர முடிந்தது. அந்த இதமான உஷ்ணம் மிகுந்த சந்தோசத்தை அளித்தது. மனதுக்கு நிறைவை அளித்தது.


அந்த இதமான சூட்டில், எனக்கு ஏற்பட்ட அதே சந்தோசம் என் நண்பர்களுக்கும் ஏற்பட்டு இருக்க வேண்டும். அதோ அவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு புணர விரும்புகிறார்கள். குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்று நினைப்பதை என்னால் உணர முடிகிறது. அவர்களுடைய நடத்தையே அதை காட்டுகிறது!


ஆனால், அந்த மிதமான சூடு அதிக நேரம் இருக்கவில்லை. நீரும் திடீரென்று வற்றிப் போனது!


நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை பார்க்க காவல் தலைவர் வந்தார். கணக்கு எடுத்துப் பார்த்தார்கள்!


ஐந்து பேரை காணவில்லை! இறந்து போய் இருக்கலாம், என்றார் காவல் தலைவர். இந்த தருணங்களில் சிலர் இறப்பது சகஜம் தான் என்றாலும், இந்த இதமான சூட்டில் உருவாகும் நம் புது உயிர்கள் அதைவிட அதிகமாக இருக்கும். அதனால், கவலை வேண்டாம், என்றார் அவர். ஆனால், என் மனம்தான் ஒத்துக் கொள்ளவில்லை!


காவல் தலைவர் மேலும் தொடர்ந்தார்.


உங்களை ஆட்சியாளர் மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறார். இப்பொழுது வர இயலுமா?’


இதோ, ஒரு நொடியில் வருகிறேன்’, என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் என்னை நானே சுத்தம் செய்து கொண்டு, அவருடன் புறப்பட்டேன்.


ஆட்சியாளர் அவருடைய இடத்தில் வீற்று இருந்தார்.


என்னை பார்த்ததும், ‘வாருங்கள்! எப்படி இருந்தது எங்கள் உலக வெள்ளம்’, என்றார், சிரித்துக் கொண்டே.


பயமாகத் தான் இருந்தது, ஐயா!’

இது சகஜமாக இங்கே நடக்க கூடிய ஒன்று. இதற்காக நீங்கள் பயப்பட தேவையில்லை’.


என்று கூறியவர், நீண்ட நேரம் என்னைப் பார்த்தார். பிறகு ஏதோ நினைத்தவர் போல்,

உங்களுக்கு இந்த உலகத்தில் என்ன வேண்டும்?’ என்றார்.


ஐயா, உங்களுக்கு தெரியாததா? நாங்கள் எத்தனையோ நாட்களாக உலகமற்ற உயிரினங்களாக திரிகிறோம். எங்களுக்கும் எங்கள் சந்ததியினருக்கும் இருக்க இடம் கொடுப்பீர்கள் என்றால், நாங்கள் என்றும் உங்களுக்கு கடமை பட்டவர்களாக இருப்போம்’, என்றேன்.


உங்கள் தேவை எனக்கு புரிகிறது. எனக்கும் உங்களுக்கு உதவ வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் இங்கே இருக்கும் மக்களுக்கே இருக்க இடமும் உணவும் பற்றாக்குறையாக உள்ளதே, நான் என்ன செய்வது? எங்கள் தலைமையகம் ஒரு போதும் இதை அங்கிகரிக்காது. நான் இதை குறித்து, நீங்கள் வந்ததுமே யோசித்து விட்டேன். பத்தில் இருந்து இருபது பேர் என்றால் நான் இங்கேயே இருக்க சொல்லிவிடுவேன். ஆனால், நீங்களோ இரு நூறு பேர் ஆயிற்றே! நான் என்ன செய்வது?’ - என்றார்.


நான் அதிகமாக யோசிக்கவில்லை. எனக்கு தெரியும், இடம் இல்லை என்றால், இடம் இல்லைதான். இதில் கெஞ்சலுக்கோ கொஞ்சலுக்கோ இடமே இல்லை! நம் விதிப்படியே நடக்கட்டும்!


ஐயா, உங்களுக்கு மிக்க நன்றி! எங்களுக்கு நல்ல உணவை கொடுத்தீர்கள். எங்களை நேர் பட உபசரித்தீர்கள். இதுவே நாங்கள் செய்த பெரும் பாக்கியம்’. 


நான் சிறு இடைவெளி விட்டுத் தொடர்ந்தேன்.


ஐயா, நீங்கள் கூறியதுப் போல், இருபது பேரை மட்டுமாவது நீங்கள் இந்த உலகில் ஏற்றுக் கொள்வீர்கள் என்றால், மிக்க நன்றாக இருக்கும். எங்களில் கொஞ்சம் பேரேனும் வாழ்வார்களே. அதுவே எங்களுக்கு போதும், ஐயா!’ என்றேன்.


என்னுடைய இந்த வேண்டுகோளை அவர் எதிர் பார்க்கவில்லை என்பதை என்னால் உணர முடிந்தது.


ஆனால், என் பார்வையில் அதுவே சரியாகப்பட்டது. கொஞ்சம் பேராவது பிழைத்து இருப்பார்களே. அதுவே இப்பொழுது எனக்கு போதுமானதாக தெரிந்தது.


அவர், தனது அருகில் இருந்த ஒருவருடன் அவர்கள் மொழியில் ஏதோ பேசினார். பிறகு என்னை பார்த்து பதில் கூறினார்.


சரி, அப்படியே செய்யலாம்! நீங்கள், உங்கள் கூட்டத்தில் யாரெல்லாம் இங்கேயே இருப்பார்கள் என்பதை கூறுங்கள். இருபது பேரே இருக்க முடியும். அவர்களை தவிர மற்றவர்கள் இன்னும் இரண்டு மணி நேரத்தில், கிளம்ப தயாராகுங்கள்!’ - என்றார்.


பிறகு, காவல் தலைவரை பார்த்து, ‘அவர்களை இரண்டு மணி நேரத்தில், நீர் பள்ளத்திற்கு கொண்டு வா! அடுத்த வெளியேற்றத்தில் அவர்களை அனுப்பிவிடலாம்’.


நான் வருத்தமாக இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல், ‘மிக்க நன்றி, ஐயா!’ என்றேன்.


இரண்டு மணி நேரத்திற்கு பிறகு -


நூற்று எண்பத்தி மூன்று பேர், நீர் பள்ளத்திற்கு அருகில் நின்று கொண்டு இருந்தோம்!


ஐந்து பேர் இறந்து விட்டார்கள். இருபது பேரை இங்கேயே விட்டுவிட்டோம்! கொஞ்சம் வருத்தம் தான். ஆனால், அவர்களாவது வாழ்வார்களே!


நான் வெளியேற்ற படுபவர்களோடு கிளம்பினேன். அது தானே தர்மம்! அது தானே நியாயம். என் உயிரை நான் எப்படி முக்கியம் என்று எடுத்துக் கொள்ள முடியும்? மற்றவர்கள் முதலில், நான் கடைசியில்! அந்த பண்பாட்டில் இருந்து நான் மாறவில்லை. ஜான் என்னுடன் இருந்தான். பாண்டியும் என்னுடன் இருந்தான்.


மிதமான சூட்டில் தண்ணீரில் இருந்த பொழுது சிலர் புணர்ந்து இருந்தார்கள். அவர்கள் கூடிய விரைவில் குழந்தைகளை உருவாக்குவார்கள் என்று நம்பினேன். வாழ்வதற்கு ஏற்ற பாறை கிடைத்தால், எங்கள் எண்ணிக்கை மீண்டும் வளரும் என்று எதிர்ப்பார்த்தேன்.


நீர் பள்ளத்தின் அருகில் சரியான இடத்தில் எங்களை நிறுத்தி இருந்தார்கள். நாங்கள் நூற்று எண்பத்து மூன்று பேரும், ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு, பயத்தால் உடல் நடுங்க, மனம் முழுக்க இறைவா, இறைவா என்று அரற்றிக் கொண்டு, காத்திருந்தோம்.


ஒரு நொடி, என் மனதில் ஓர் எண்ணம்.


இப்படித்தான் நம் கொள்ளு தாத்தாவும், ஏதோவொரு உலகத்தின் நீர் பள்ளத்தின் அருகில், பல ஆண்டுகளுக்கு முன்னால் நின்று கொண்டு இருந்து இருப்பாரோ? என் மனம் அதற்கு மேல் சிந்திக்க மறுத்தது!


இறைவா, எங்களுக்கு வாழக் கூடிய இடத்தை கொடு! இந்த இருபது பேரும் வாழ்ந்து வளரட்டும்!


எந்த வித முன் அறிவிப்பும் இன்றி, திடீரென்று காற்று பலமாக தாக்கி எங்களை பள்ளத்திற்குள் தள்ளியது. அதேப்போல், நீர் மிக வேகமாகவும் பலத்த சுழற்சி உடனும் வந்து மோதியது.


என் மேல் இடித்தது என்ன என்பதை உணரும் முன்பே நான் நீர் பள்ளத்தின் அதலபாதாளத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டேன். இன்னமும் நாங்கள் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தோம். அந்த வேகத்தை புரிந்து கொள்ளும் முன்னரே, இன்னும் அதிகமான வேகத்துடன் வெட்ட வெளியில் வீசி எறியப்பட்டேன்!


சில கைகள் பிணந்து இருந்தன. சிலர் விடுபட்டு சென்றுவிட்டனர்.


பிணைந்த கைகளுடன் நாங்கள் மிதந்தோம். பாறை கிடைக்குமா? வேறொரு உலகில் வாழும் பாக்கியம் கிடைக்குமா? உலகத்தின் நானாவித உணவு வகைகளை நான் மறுபடியும் உண்பேனா?


என்னைப் போன்ற ஒரு சாதாரண கிருமிக்கு மறுபடியும் ஏதாவது ஒரு மனித அண்டத்தில், அந்த மனித உடலில் இருக்கும் ஆயிரம் உலகங்களில், ஏதேனும் ஒன்றில் வாழக்கூடிய வாய்ப்பு கிடைக்குமா? மனித வயிற்றில், அந்த உலகத்தில், இருந்து நான் வெளிப்பட்டேன் என்றால், எவர் நம்புவார்கள்?


இன்னொரு மனித வயிறு கிடைக்கும் வரை, கொரானா வைரஸ் என்று சொல்லப்படுகின்ற நான், இந்த வெட்ட வெளியில், பல்லாயிரம் கிருமிகளில் ஒன்றாக சஞ்சரிப்பேனா? அல்லது செத்து மடிவேனா?


Answers to Common Questions About How Viruses Work - Ask The Scientists



Comments

Post a Comment

Popular posts from this blog

Krishna's Curse

How India defeated China?